எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு!
 • கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம் நற்பிட்டிமுனையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், ஆலய அறங்காவல் சபை உறுப்பினர்கள், மகளிர் அமைப்பு அங்கத்தவர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், கமநல அமைப்பு அங்கத்தவர்கள், நற்பிட்டிமுனை கிராம வாழ் பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மூன்று பேரை வேட்பாளர்களாக முன்மொழிந்துள்ளனர்.

  இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான உபதலைவரும் நற்பிட்டிமுனை, ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலய பொருளாளருமான க.கனகராஜா தலைமையில் நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில் கூட்டம் இடம்பெற்றது.

  இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மு.இராஜேஸ்வரன் விஷேட அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு எதிர்வரும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் இம்முறை இடம்பெறும் தேர்தல் பெண்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கவுள்ளதால் மக்கள் சேவையில் இணைந்து பணியாற்றும் ஆற்றலுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியத்தின் இருப்பையும் உயிர்ப்பையும் பாதுகாக்க வேண்டிய பணி பொது மக்களுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

  இக்கூட்டத்தில் ஆண்கள் சார்பில் வேட்பாளராக தி.இராசரெத்தினம், மற்றும் பெண்கள் சார்பில் சு.பாக்கியவதி, பா.தமிழ்செல்வி ஆகியோரின் பெயர்கள் ஏகமனதாக சபையோரால் முன்மொழியப்பட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

  print

  Comments

  comments

  Leave a Reply