அடையாளம் காட்டாததன் பின்னணி என்ன? விசாரணை தேவை!

அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்படவில்லை.

சந்தேகநபர்களில் ஒருவரைத் தனக்கு நன்கு தெரியும் என்றும், அவரை மீண்டும் கண்டால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஆரம்பத்தில் திடமாகக் கூறிய சாட்சி, கடைசியில் சந்தேகநபர்களை அடையாளம் காட்டாமல் விட்டதன் பின்னணி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

பொலிஸாரும் நீதித்துறையும் அதிகம் கவனிக்க வேண்டிய விடயமாகவும் இது இருக்கின்றது.
கடந்த ஐப்பசி மாதம் 22ஆம் திகதி கிழக்கு அரியாலை, மணியந்தோட்டத்தில் முதலாம் குறுக்குத் தெருவில் வைத்து டொன்பொஸ்கோ டினேசன் என்ற இளைஞர்(வயது 24) சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்து அவர் பயணித்த போது சுடப்பட்டார். படுகாயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரே இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒரே சாட்சி.

டினேசன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த போது அங்கு நின்றிருந்த உறவினர்களிடம் இந்தச் சாட்சி, சுட்டவர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், அவரைத் தாம் பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் கண்டிருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்திருந்தார்.

அவரை மீண்டும் கண்டால் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கொலைக்கும் படைத்துறைப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் இருக்குமா என்கிற சந்தேகம் அவரது அந்த வாக்குமூலத்தின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாண நகரப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அணி துப்புத் துலக்கி சம்பவத்திற்கும் அதிரடிப் படையினரின் புலனாய்வாளர்களுக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்களைக் கண்டறிந்தனர்.

ஆனால், சிறப்பு அதிரடிப் படையினரின் பண்ணை முகாமுக்குள் சென்று அவர்கள் தேடுதல் நடத்துவதற்கு முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் இருந்து யாழ்ப்பாண அணியினர் அகற்றப்பட்டு, கொழும்பில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டனர்.

சிறப்பு அதிரடிப் படையினரிடம் விசாரணை நடத்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ என்பவற்றை பண்ணை முகாமில் இருந்து அவர்கள் மீட்டனர்.

மேலும் சில நாள்களின் பின்னர் சிறப்பு அதிரடிப் படையினர் இருவரையும் கைது செய்தனர். இந்தக் கைது நடந்த போதே, சந்தேகநபர்களைச் சாட்சி அடையாளம் காட்ட மாட்டார் என்கிற கதைகள் விசாரணை வளையத்திற்கு வெளியே அடிபடத் தொடங்கி விட்டது.
இந்தக் கொலையில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா தொடர்பான வியாபாரம் தொடர்புபட்டிருப்பதான தகவல்களும் கசிகின்றன.
கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேகநபர்களும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே.
சாட்சிக்கும் இவர்களுக்கும் இடையிலான பேரம் படிந்ததன் பேரிலேயே சாட்சி அடையாளம் காட்ட மாட்டார் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. இது ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என்பதால் அப்போது அதனைப் பத்திரிகையாளர்கள் புறக்கணித்து விட்டனர்.
ஆனால், ஆரம்பத்தில் தன்னால் கொலையாளியைத் தெளிவாக அடையாளம் காட்ட முடியும் என்றும், அவர் படைத்துறைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தெளிவாகச் சொன்ன சாட்சி, அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டத் தவறியிருப்பதைப் பார்க்கையில் , பின்னால் திரும்பி இந்தக் கதைகளின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கிறது.
அதுவும் தவிர இந்த வழக்கு விசாரணையில் மேலும் சில கேள்விகளும் இருக்கின்றன.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்தமையும், ஓட்டோவில் வேறு சிலர் பயணித்தமையும் சிசிரிவி கமரா பதிவுகளில் உள்ளன.
அவற்றைக் கொண்டே மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் கைப்பற்றப்பட்டன. எனினும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மட்டுமே இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டோவில் பயணித்தவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஓட்டோவில் பயணித்தவர்கள் ஏன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது ஒரு கேள்வி.

வழக்கின் ஒரே சாட்சியான நபர் கொலை நடந்ததும் அந்தக் கொலையின் போது, தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று அதிலிருந்த குருதிக் கறைகளையெல்லாம் கழுவித் துடைத்து அழித்து விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தே காயம்பட்டவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார்.

அப்படி அவர் சான்றுகளை மறைக்கும் வகையில் நடந்து கொண்டபோதும் அது குறித்து அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படாதது ஏன் என்பது இரண்டாவது கேள்வி.பல கோடி ரூபா போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியுடன் தொடர்புபடும் இந்த வழக்கில், இத்தகைய சந்தேகங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டுத் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.

விசாரணையாளர்கள் அது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close