Thamarai News

தாமரை செய்திகள்

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்குமிடையிலான கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி றொபர்ட் பி.கில்டன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பும், கலந்துரையாடலும் நேற்று (15) மட்டக்களப்பு நல்லையா வீதியலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம்.

குறிப்பாக இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் படிப்படியாக இழந்து கொண்டே வந்திருக்கின்றார்கள். பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன, பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன ஆனால் அவைகள் இடைநடுவில் கைவிடப்பட்டவையாகவே அமைந்தன. இதன் காரணமாக பெரியதொரு போர், பாரிய அழிவுகள் நடைபெற்று தற்போது புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளது. தற்போதைய பாரளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது.

எமது கட்சியால் சமஷ்டி அடிப்படையிலான முன்மொழிவு கூறப்பட்டுள்ளது. மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், வழங்கப்படுகின்ற அந்த அதிகாரங்கள் நினைத்த மாத்திரத்தில் மீளப்பெற முடியாத பொறிமுறையில் அமைய வேண்டும், பாரம்பரிய வாழிடங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், போன்ற விடயங்களோடு காணி அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்குடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரம் என்பனவும் வழங்கப்படும் வகையில் அந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற செயற்பாட்டில் எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இடைக்கால அறிக்கை தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட விடயம் முடிவடைந்த கையோடு அரசியலமைப்பு உருவாக்கும் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு, அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மக்கள் தீர்ப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதில் தாமதங்கள் இருத்தல் கூடாது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணிமனையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது.

காணிகள் விடயத்தில் 1981ம் ஆண்டுக்கு முன் இருந்த சட்டவிதிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். இதனடிப்படையில் புதிதாகக் கொண்டு வரப்பட்ட வனபரிபாலன திணைக்களம், வனசீவராசிகள் சட்டம், தொல்பொருள் ஆய்விடங்கள் தொடர்பான சட்டம், மகாவலி அதிகார சபை தொடர்பான விடயங்கள், கரையோரப் பாதுகாப்புச் சட்டம் என்பன மீள்பரிசீலனை செய்யப்பட்டு அண்மைக் காலங்களில் அரசிற்குச் சொந்தமாக்கப்பட்ட காணிகள் பழைய நிலைமைக்குக் கொண்டவரப்பட்டு அவற்றின் மீது மாகாண அரசின் செயற்பாடு அனுமதிக்கப்பட வேண்டும்.

குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள், முன்னாள் போராளிகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் கரிசனை காட்டப்பட வேண்டும். வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய விதத்தில் தொழிற்துறைகள் உருவாக்கத்திற்கு வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிதி உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

கைதிகளின் சித்திரவதை தொடர்பில் நாகரீகமடைந்த நாடுகளில் காணப்படுகின்ற முறைமைகள் இங்கு கையாளப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரே குற்றவாளி என்ற வகையில் தான் நோக்கப்படுகின்றார்கள். கைதுகளின் பின்னர் தூசித்தல், வன்முறைகளைக் கையாளுதல் என்பன இங்கு இயல்பாகவே நடைபெறுகின்றன. இவை தொடர்பிலும் சர்வதேச நியமங்கள் பேணப்பட வேண்டும்.

போன்ற பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டதாகவும், இவை தொடர்பில் தங்கள் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தும் என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close