எரிபொருள் விநியோக குளறுபடிக்கு இந்தியாவை குறை கூறுவதில் பயனில்லை

அமைச்சர் மனோ கணேசன்

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, பொது எதிரணியினர், இந்தியாவை குறை கூறுவது தும்பை விட்டு வாலை பிடிப்பது போன்றதாகும். இதைவிட பொது எதிரணி தலைவர், தன் வழமையான திருப்பதி யாத்திரையின் போது இதுபற்றி இந்திய கடவுளிடம் முறையீடு செய்யலாம். உண்மையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், 21 நாட்களுக்கு தேவையான எரிபொருளை எப்போதும் சேமித்து வைத்திருக்கும் வழமையை இம்முறை கடைபிடிக்க தவறியமையே, இன்றைய சிக்கலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. நாட்டின் அதிகமான தனியார், பொது வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் ஓடும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில் இது தொடர்பில் தொல்லைகளை சந்தித்துள்ள மக்களிடம் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

இந்நாட்டில் இன்று எது நடந்தாலும் அதற்கு இந்தியாவை தேடி குறை கூறுவது பொது எதிரணிக்கு பழகி விட்டது. எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வாராந்திர அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், 21 நாட்களுக்கு தேவையான எரிபொருளை எப்போதும் சேமித்து வைத்திருக்கும் வழமையை கடைபிடித்ததாகவும் தெரியவில்லை.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கப்பலில் தரமற்ற எரிபொருள் இருந்த காரணத்தால் அது நிராகரிக்கப்பட்டது. உண்மையில், இந்திய எரிபொருள் மாபியா இலங்கைக்குள் வியாபித்து இருக்கின்றது என்றால், அது நிராகரிக்கப்பட்டு இருக்காது. இதுபோன்று கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கொண்டு வரப்படும் எரிபொருள்களும் பல சந்தர்பங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம், உடனடி தேவைக்கு இந்தியாவில் இருந்தே அவசரமாக எரிபொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் எரிபொருள் இறக்க முன் நடைபெறும் பரிசோதனைகள் மூலம், இம்முறை இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தரமற்ற எரிபொருள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய சந்தர்ப்பங்களை சமாளிக்க, 21 நாட்களுக்கு தேவையான எரிபொருளை எப்போதும் சேமித்து வைத்திருக்கும் வழமை இம்முறை கடைபிடிக்க முடியாமல் போனதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனத்தை நுரை கூறுவதும் பிழையானதாகும். இந்த நிறுவனம் இலங்கை எரிபொருள் விநியோகத்தில் 14% கையாள்கிறது. இந்த விவகாரம் பற்றி ஆராய, ஜனாதிபதி விசேட அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழு நிலைமையை சீர் செய்யும் அதேவேளை இந்த சிக்கலுக்கு பின்னணியில் தவறிழைத்துள்ளவர்கள் எவர் என்பதை கண்டு பிடிக்கும் பணியிலும் ஈடுபடும்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close