வித்தியாவுக்கு  கிடைத்த வெற்றி

நீதிபதிகளுக்குப் பாராட்டு
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி வித்தியா தொடர்பான வழக்குக்கு, நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதி தேவதைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் 45.2 மில்லியன் ரூபா பெறுமதியான 18 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த காலங்களைவிட தற்போது, அரசின் தலையீடு இல்லாமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுகின்றது.

இது நல்லாட்சியின் மூலம் கிடைத்த ஒரு வெற்றியாகும். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள். சட்டம் அனைவருக்கும் சமனானது என இந்தத் தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பு மூலம், எமது நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுகின்றது என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.

நீதிமன்ற வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. அதனால், நீதிமன்றத்தை நாடுவதை மக்கள் விரும்பவில்லை. ஆனால், இந்தத் தீர்ப்பு மிகவும் விரைவாகவும், சரியாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கல்வியில் எந்தளவு கவனம் செலுத்துகின்றார்களோ, அந்தளவு தங்களுடைய பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தனியாகப் பாடசாலைக்கு வருவதையோ அல்லது தனியாக தனியார் வகுப்புகளுக்கு செல்வதையோ மாணவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் நேரடியாகத் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல வேண்டுமே தவிர, சுற்றித் திரிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய பெற்றோர்கள் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே உங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அவர்களுடைய அந்த அர்ப்பணிப்பை புரிந்து கொள்ள வேண்டும்.

வித்தியாவின் சம்பவம் எங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய நண்பர்கள் தொடர்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்றைய இந்த நவீன உலகில் மாணவர்களை சீரழிக்கின்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்கள் கூட விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறான இடங்களைப் பெற்றோர்களோ மாணவர்களோ அறிந்து கொண்டால், அது தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது உங்களுடைய பாடசாலை அதிபர்களுக்கோ அறிவிக்க வேண்டும்.

பாடசாலைகளுக்கு அருகில் செயற்படுகின்ற விற்பனை நிலையங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது.

நாங்கள் அனைவரும் மாணவர்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close